துறை : புகாஅக் காலை புக்கெதிர்ப்பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக்கண் தலைவி தோழிக்குக் கூறியது . துறை விளக்கம் : தலைவன் தலைவியைக் காண வேண்டும் என்று ஆசியுற்றான் . அதனால் தான் புகுதற்குத் தகுதியல்லாத பகற்பொழுதில் , தலைவன் உணவு நேரத்தில் தலைவியின் வீட்டுள் புகுதல் , அவ்வாறு புகுந்தவனைத் தலைவி விலகாமல் ஏற்றுக் கொள்ளுதல் .
கலித்தொகை பாடல் சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி, மேல் ஓர் நாள், அன்னையும் யானும் இருந்தேமா, ‘இல்லிரே! 5 உண்ணு நீர் வேட்டேன்' என வந்தாற்கு, அன்னை, அடர் பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்! உண்ணு நீர் ஊட்டி வா’ என்றாள்: என, யானும் தன்னை அறியாது சென்றேன்; மற்று என்னை வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு, 10 அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் 15 செய்தான், அக் கள்வன் மகன்
தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள். சுடரும் வளையல் அணிந்தவளே கேள். அன்று ஒருநாள் நாம் தெருவில் மணல்வீடு கட்டி விளையாடினோம். அப்போது, அங்கு ஒருவன் வந்தான். தன் காலால் நம் மணல்வீட்டைக் கலைத்தான். நாம் சூடியிருந்த மாலைகளைப் பரித்துக்கொண்டான். நம் பந்துகளையும் எடுத்துக்கொண்டு ஓடினான். இப்படியெல்லாம் நமக்குத் துன்பம் உண்டாக்கியவன் அவன். குறும்பு செய்யும் பட்டிக் காளை போன்றவன் அவன், பின்னர் ஒருநாள் வந்தான். என் தாயும் நானும் வீட்டில் இருந்தோம். “தண்ணீர் தாகமாக இருக்கிறது” என்றான். என் தாய் அடர்ந்த பொன் கிண்ணத்தில் தண்ணீர் மொண்டுகொண்டு வந்தாள்.
சுடரும் அணிகலன் பூண்டவளே! அவன் நீர் உண்ணும்படிச் செய்துவிட்டு வா - என்றாள். நானும் முன்பு குறும்பு செய்த அவன் என்று அறியாமல் சென்றேன். அவன் வளையலணிந்த என் கையைப் பற்றி இழுத்துத் துன்புறுத்தினான். நான் மருண்டுபோனேன். “அன்னாய், இவன் ஒருவன் செய்வதைப் பார்” என்று கூச்சலிட்டேன். என் தாய் அலறிக்கொண்டு ஓடிவந்தாள். “உண்ணும் தண்ணீர் விக்கினான்” என்றேன். அன்னை அவன் பிடரியை நீவினாள். அவனோ என்னைக் கடைக்கண்ணால் பார்த்தான். கொல்பவன் போலப் பார்த்தான். அவனும் நானும் சிரித்துக்கொண்டோம் அவன் திருடன் மகன். காதல் திருடன். .
நய உரை: இன்றைய திரைப்படக் கவிஞர்களாலும் கற்பனை செய்யமுடியாத அற்புதமான காதல் ஓவியம் இது. தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனைத் தாயிடம் கூடக் காட்டிக்கொடுக்க விரும்பாத தன் செயலால், ஆழமான தன் காதலை வெளிப்படுத்துகிறாள். இக்காலத்தில் வீட்டிற்கு முன்பாக நின்று யாரேனும் குடிப்பதற்கு நீர் கேட்டால் வயதுக்கு வந்த பெண்களை நாம் அனுப்புவோமா? வந்தவனின் தாகம் தணிக்கத் தன் மகளிடம் தாய், நீர் கொடுத்து அனுப்புகிறாள். இது தன் மகளிடம் தாய் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது. பொன் கிண்ணத்தில் நீர் கொடுத்து அனுப்பியது, குடிமக்களின் செல்வச்செழிப்பைக் காட்டுகிறது. விக்கல் எடுத்தபோது, ஆண்மகன் என்றும் பாராது அவன் புறம் நீவியது, தாயின் அன்பைக் காட்டுகிறது.